
போதைப் பொருட்களுடன் பிடிபட்ட இளம்பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ(25), வெட்டுக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த சாமிம்பானு (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 86 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கும்பலுடன் பலருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்த விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.