
திருச்சியில் பிரதான கடைவீதிகள் மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் நேற்று(11.10.2023) திருச்சி நகர்ப் பகுதி பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் தனுஷ் சகாய ஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகிய நான்கு பேரில் வீட்டில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 108 பச்சை கிளிகள், 30 முனியாஸ் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அத்தோடு சேர்த்து 5 கூண்டு கம்பிகள் வலைகள் உள்ளிட்டவைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பச்சைக்கிளிகள், முனியாஸ் பறவைகள் உள்ளிட்டவைகளை பிடித்துக் கொடுத்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த திருஞானம் என்பவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அதில் 8 முனியாஸ் பறவைகள், வேட்டையாட பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் வலைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 51 வழக்குகள் பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்பு நீதிமன்ற காவலில் 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், “பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பச்சைக் கிளிகளை விற்பதும், வாங்குவதும் ஜாமீனில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இது குறித்து தகவல் ஏதும் இருப்பின் வனச் சரக அலுவலர் திருச்சி அலைபேசி எண் 9443649119 ல் தொடர்பு கொள்ளவும். தங்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்தார்.