5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

Advertisment

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத்தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத்தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத்தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.