Skip to main content

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; தலைதெறிக்க ஓடிய பதிவுத்துறை அதிகாரிகள்!

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

 5 lakh seized in the anti-bribery department in the Cuddalore corporation

 

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் வரைபட அனுமதி மற்றும் புளுபிரிண்ட் அனுமதி பெற வேண்டும். கடந்த சில மாதங்களாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக வரைபட அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாறாக, புதுப்பாளையம், கோண்டூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்கள் மூலமாக அனுமதி அளிப்பதாகவும், அதற்கு கட்டடங்களின் பரப்பளவை பொறுத்து தனியார் நிறுவன உரிமையாளர்கள் பொதுமக்களிடம் அதிகளவு லஞ்சம் பெற்று, அதனை மறைமுகமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பலர் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். 

 

 5 lakh seized in the anti-bribery department in the Cuddalore corporation

 

இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் 5 குழுக்களாக பிரிந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையத்தில் உள்ள பங்கஜம் கன்ஸ்ட்ரக்சன், கோண்டூர் மற்றும் கான்வென்ட் ரோட்டில் உள்ள பங்கஜம் கன்ஸ்ட்ரக்சன் கிளை நிறுவனங்கள், பாரதி சாலையில் உள்ள ஆல்பா கன்ஸ்ட்ரக்சன் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மதியம் 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9 மணியைத் தாண்டியும் நடந்தது. இதில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, நகரமைப்பு அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் 4 இடங்களில் இருந்த தனியார் கன்ஸ்ட்ரக்சன் அலுவலகங்கள் முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

 

 5 lakh seized in the anti-bribery department in the Cuddalore corporation

 

மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுமானம் தொடர்பான கோப்புகள் காணாமல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் தனியார் கட்டுமான அலுவலகங்களில் நகர அமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் 15 ஊழியர்களைக் கொண்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்த ஊதியத்தில் 15 ஊழியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு அரசு அலுவலகத்திற்கு இணையான ஒரு அலுவலகமே இங்கு செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்த காகிதத்தையும் எடுத்தனர். அதில் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பைகளில் எடுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் மாநகராட்சி அலுவலகம் உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 5 lakh seized in the anti-bribery department in the Cuddalore corporation

 

இதனிடையே கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருவதாக தகவல் வெளியானது. இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த பதிவர், எழுத்தர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என அனைவரும் மதியம் 4:30 மணி அளவில் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாத நிலையில், மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் அனைத்தும் எரிந்தபடியே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக யாரும் இல்லாத அரசு அலுவலகமாக காட்சி அளித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருவதாக தகவல் வெளியானதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் போட்டது போட்டபடியே விட்டு விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்