Advertisment

ஆந்திரத்தில் 5 தமிழர்கள் காவல்துறையினரால் கொலையா? சிபிஐ விசாரணை வேண்டும்! ராமதாஸ்

ஆந்திரத்தில் 5 தமிழர்கள் காவல்துறையினரால் கொலையா? சிபிஐ விசாரணை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களில் இருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உள்ளிட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவதும், என்கவுண்டர் உள்ளிட்ட முறைகளில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் ஒண்டிமிட்டா ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மேலும் சிலரின் உடல்கள் ஏரியில் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐவரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதை இதுவரை உறுதி செய்ய முடியவில்லை. காவல்துறையினர் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியிருக்கலாம்; அதில் இறந்தவர்களின் உடல்களை ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் குற்றம்சாட்டப்படுவதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்ததுதொடர்பாக ஆந்திர காவல்துறையினர் அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. சனிக்கிழமை இரவு ஒண்டிமிட்டா பகுதியில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது செம்மரங்களை வெட்டுவதற்காக சரக்குந்தில் வந்த ஒரு கும்பலை தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் தப்பியோடியதாகவும், அவர்களில் சிலர் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆந்திர காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இதை நம்பமுடியவில்லை. காவல்துறையினரால் துரத்தப்பட்டவர்கள் ஏரியில் குதித்து உயிரிழந்தார்கள் என வைத்துக்கொண்டால்கூட, அவர்களுடன் வந்த மற்றவர்கள் ஒருவர்கூட தப்பியிருக்க மாட்டார்களா? என்ற வினா எழுகிறது. அதுமட்டுமின்றி, ஏரியில் பிணமாகக் கிடந்தவர்களின் உடல்களில் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் சித்ரவதை செய்ததால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த வினாக்களுக்கு ஆந்திர காவல்துறையால் பதிலளிக்க முடியவில்லை.

இறந்தவர்களின் உடலில் காயங்கள் இருப்பது உறுதியானதால், அவர்கள் செம்மரங்களை கடத்தி வந்திருக்கலாம் என்றும், அவற்றை அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் வேறு ஏதேனும் கும்பல் அவர்களை கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் புதிய காரணத்தை காவல்துறை பரப்பி வருகிறது. இது காவல்துறை மீதான ஐயத்தை அதிகப்படுத்துகிறது. தங்களின் குற்றத்தை மறைக்க புதுப்புது கதைகளை ஆந்திர காவல்துறை ஜோடிக்கிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது.

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக்கடத்தல் கும்பல்கள் அழைத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு அழைத்துச் செல்லும் கடத்தல் கும்பல்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆந்திர காவல்துறை அப்பாவித் தொழிலாளர்களை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது. யாராக இருந்தாலும், செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை கொலை செய்வதை சகிக்க முடியாது.

ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தொடர்பான வழக்கை ஆந்திர காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ramdoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe