Skip to main content

ஐந்து கோடிக்கு முறைகேடாக டெண்டர் விடப்பட்டுள்ளது! திமுக ஒன்றியகுழு தலைவர் புகார்!!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மாவட்டக்கவுன்சிலர் பதவி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி உட்பட அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பாக ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான ப.க.சிவகுருசாமி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த மாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்திற்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய ஒன்றிய குழு தலைவர் ப.க.சிவகுருசாமி 50 ஆண்டுகளாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் திமுக சார்பாக போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளாட்சி பதவிகளில் இருந்துள்ளேன். இம்முறை நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் திமுகவிற்கு அமோகமாக வாக்களித்து 24 ஊராட்சிகளில் 23 ஊராட்சிகளில் திமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர். இது தவிர ஒன்றியகுழ உறுப்பினருக்கான தேர்தலில் ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் திமுக சார்பாக போட்டியிட்டவர்களை பொதுமக்கள் அமோக வெற்றி பெற செய்துள்ளார்கள். 

இதற்கு காரணம் ஆத்தூர் தொகுதி மக்களின் பாதுகாவலரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளருமான அண்ணன் இ.பெரியசாமி அவர்கள்தான் காரணம் என்றார். தொகுதி மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பயன்படுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்ததற்காகவும், நலத்திட்டங்களை நிறைவேற்றியதற்காகவும் வாக்காளர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் திமுகவிற்கு அமோக வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள் என்றார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக ஒன்றியத்தை சேர்ந்த அதிகாரிகள் பொதுநிதியை அதிகஅளவில் செலவு செய்து வங்கிக்கணக்கில் ஒருபைசாகூட இல்லாமல் வைத்துள்ளார்கள். 

இது தவிர 5கோடிக்கு டென்டர் விட்டு அதுவும் ஒரே நபரே எடுத்துள்ளார். இது முறைகேடான செயலாகும். ஒன்றிய நிதி இல்லாததால் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தேர்தலின் போது நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம். முதல் கட்டமாக கிராம ஊராட்சிகளில் குடிதண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைப்பதோடு தெருவிளக்கு வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்தி கொடுப்போம் என்றார். 

நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்திற்கு வந்த ஒன்றிய குழு தலைவர் ப.க.சிவகுருசாமிக்கு பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

50 வருட அரசியல் அனுபவத்துடன் 84 வயதிலும் சுறுசுறுப்பாக தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ப.க.சிவகுருசாமியின் இந்த பன்பு திமுக தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திமுகவில் உள்ள இளைஞர்களுக்கு இவரின் செயல்பாடு நல்ல பாடமாக அமைந்தது. நன்றி தெரிவிக்க வந்த ப.க.சிவகுருசாமியிடம் ஒருசில பொதுமக்கள் காலில் விழுந்து வாழ்த்து பெற்றது நெகிழ்சி அடைய செய்தது. நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி திமுக மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகவேல், கன்னிவாடி பேரூர்கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருணாச்சலம் அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாங்கரை ஊராட்சி திமுக பொருப்பாளர் திருப்பதி, டி.புதுப்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் உதயகுமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கமணி முருகைய்யா கழக பேச்சாளர்கள் கோட்டைப்பட்டி மணி கன்னிவாடி ஜீவா ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாண்டி மீனா, உமாமகேஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மாணவர் அணியினர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.