Advertisment

'ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்: இதுதான் சட்டம்-ஒழுங்கு லட்சணமா?'-அன்புமணி ஆவேசம்

'5 case every day: Is this the Dravidian model?' - Anbumani Aavesam

'தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள் நடக்கிறார். இது தான் திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணமா?' என பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொடூரக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து வினா எழுப்பும் போதெல்லாம் தமிழ்நாட்டில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றும், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது.

2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டில் 1686, 2022-ஆம் ஆண்டில் 1690, 2023-ஆம் ஆண்டில் 1681, 2024-ஆம் ஆண்டில் 1540 என கடந்த 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. முதலமைச்சரின் கூற்றுக்கு மாறாக முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் 2016-ஆம் ஆண்டில் 1603, 2017-ஆம் ஆண்டில் 1560, 2018-ஆம் ஆண்டில் 1569, 2019-ஆம் ஆண்டில் 1745 என 6477 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததை விட திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 30 படுகொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன. விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளை விட, திமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2% கொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன.

திமுக ஆட்சியில் உண்மையிலேயே சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு திமுக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தான் சான்று ஆகும்.

கொலை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக அரசு கூறுகிறது. அதிலும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை படுகொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

கொலைகளைத் தடுப்பதிலும், துப்புதுலக்குவதிலும் தமிழக காவல்துறை மிக மோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம் திமுக அரசின் செயல் திறனற்ற தன்மை தான். தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pmk TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe