Skip to main content

 ‘வெயிட்டிங் ஃபார் 302’ - ரீல்ஸ் வெளியிட்ட 5 பேர் கைது!

Published on 11/03/2025 | Edited on 11/03/2025

 

Boy arrested for releasing 'waiting for 302' reels

சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காகவும், லைக்ஸ்களை வாரி குவிப்பதற்காகவும் இன்றைய இளைஞர்கள் சில ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் எடுத்து அதன் மூலம் புகழடைவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால் கிடைக்கும் புகழ் போதையை அனுபவிப்பதற்கு இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். அதே நேரம், குற்றச் செயலில் ஈடுபட துடிக்கும் நபர்களும் சோசியல் மீடியாவில் தங்களுக்கானதாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை புளியந்தோப்பில் அரங்கேறிய ஒரு சம்பவம்.. அனைவருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘waiting for 302’(அரசியலைப்பு சட்டம் 302 என்பது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் மீது பதியப்படும் வழக்குப்பதிவு) என்ற தலைப்பில் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த பதிவு போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்மந்தப்பட்ட சிறுவனை பிடித்து அவனது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து, அந்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் சில திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானது. சம்மந்தப்பட்ட சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் அந்த சிறுவனையும் அவனது பெரியம்மாவையும் எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து எதிர் தரப்பினரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். அதன் காரணமாக தான் கொலை செய்யும் நோக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனிடையே, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த 4 சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்காமல் கருணை அடிப்படையில் எச்சரித்து அனுப்பி வைத்தார். ஆனால், 18 வயது கடந்த ஒரு இளைஞரை மட்டும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே, யாரும் எதிர்பாராத சமயத்தில்.. இளைஞர் சிறை சென்ற அடுத்த நாள் அவருடைய தந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த மரணம் அவருடைய குடும்பத்தையே உலுக்கிப் போட்டுள்ளது. 

தந்தையின் இறுதிச் சடங்கில் மகன் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.. வழக்கறிஞர்கள் பர்வேஷ், ராம்கி, சதிஷ் உள்ளிட்டோர் புழல் சிறையில் இருக்கும் இளைஞருக்கு BAIL கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி.. சம்மந்தப்பட்ட இளைஞருக்கு  வருகின்ற 12ம் தேதி வரை BAIL வழங்கி உத்தரவிட்டார். வெயிட்டிங் பார் 302 என இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்