5 arrested for taking loan from bank by showing fake documents

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் தனியார் எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆம்பூர் அருகே வெங்கிலி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (44), இவரது மனைவி மஞ்சுளா (40) ஆகிய இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது .

Advertisment

இது தொடர்பாக வங்கியின் தணிக்கைத்துறை அதிகாரி கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார். ஆய்வில் கடன் வாங்க வங்கியில் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. அதன்பேரில் போலியான பத்திரத்தை காட்டி கடன் வாங்கியவர்கள், போலி பத்திரத்தை வைத்துக் கொண்டு கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கியின் தணிக்கைத் துறை அலுவலர் கார்த்திகேயன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சொத்து பத்திரத்தை காட்டி கடன் வாங்கிய சரவணன், அவரது மனைவி மஞ்சுளா, பிணையக் கையெழுத்து போட்ட வெங்கிலியை சேர்ந்த விநாயகமூர்த்தி (57) மற்றும் வங்கியின் கடன் மேலாளர் வெங்கிலியை சேர்ந்த ராஜி (35), வங்கியின் மேலாளர் மஞ்சுநாதன் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வங்கி பணியாளர்கள் கார்த்திக், மதன்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.