Skip to main content

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் அதிரடி கைது! 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

5 arrested for selling cannabis in Cuddalore district 4 kg of cannabis seized

 

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதையடுத்து கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 

அப்போது திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகன் முனீஷ் (எ) முனுசாமி(26) என்பவர் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற முனுசாமியை போலீசார் சுற்றி வளைத்து, மடக்கி பிடித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

அதன்பிறகு திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதவிர கூத்தப்பாக்கம் பகுதியில் 250 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்த கே.என்.பேட்டை முருகன் மகன் ஸ்ரீதர்(20), திருப்பாதிரிப்புலியூரில் 250 கிராம் கஞ்சா விற்ற தங்கராஜ் நகரை சேர்ந்த ரவி மகன் ராஜேஷ்(19) ஆகிய 2 பேரையும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

இதேபோல் டெல்டா போலீசார் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் ஒன்னேகால் கிலோ கஞ்சாவை வைத்து விற்பனை செய்த திருவரசன் மகன் மாணிக்கம் என்கிற மாணிக்கவேல்(28), கிள்ளை தெற்கு தெருவில் ஒன்னேகால் கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்துகொண்டிருந்த மாறன் கிருபாநிதி(24) ஆகிய 2 பேரையும் பிடித்து சிதம்பரம், கிள்ளை போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் அந்தந்த காவல் நிலையங்களளில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்