Skip to main content

46 வழக்குகள்... தமிழகம் முழுவதும் 500 பவுன் நகைகள்... பிடிபட்ட பலே கில்லாடி

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

46 cases... 500 pounds of jewels across Tamil Nadu. Thief arrested by salem police

 

தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து 500 பவுன் நகைகள், பணத்தைத் திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு காவல்நிலையங்களில் அவர் மீது 46 வழக்குகள் பதிவாகி உள்ளன. 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையில் காவல்துறையினர் நவ. 2ம் தேதி அம்மம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் காவல்துறையினரைக் கண்டதும் வாகனத்தைத் திருப்பிக் கொண்டு தப்பிக்க முயன்றார். சந்தேகத்தின் பேரில் அவரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  

 

விசாரணையில், அந்த இளைஞர் ஆத்தூர், அம்மம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (27) என்பது தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த வாகனத்திற்கான ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவரிடம் ஆவணங்கள் இல்லாததும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து திருடி வந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆத்தூர் நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

 

பிடிபட்ட வெங்கடேஷ், பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடுவதையே முழுநேர தொழிலாகக் கொண்டவர் என்பதும், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம், வீரகனூர் பகுதிகளில் இரண்டு வீடுகளில் 20 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச்சென்றதும், அவற்றை சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று பணமாக்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக குறிப்பிட்ட அந்த நகைக்கடைக்காரரிடம் இருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. இதையடுத்து வெங்கடேஷை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியது: நான் சின்ன வயதாக இருந்தபோதே சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். அந்தக் குற்றங்களில் யாருமே என்னை கண்டுபிடித்ததில்லை என்பதால் அதையே முழுநேரத் தொழிலாகவும் மாற்றிக் கொண்டேன். எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர். என் மனைவிக்குக் கூட நான் திருடன் என்பது தெரியாது. திருடிய நகைகளை விற்று பணமாக்கி நண்பர்களுடன் மதுபானம் குடிப்பேன். பெண்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவேன். 

 

சேலம் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பல நாட்களாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அங்கு நகை, பணத்தைத் திருடி இருக்கிறேன். பெரும்பாலும் பூட்டை உடைத்து வீடுகளுக்குள் நுழைந்துவிடுவேன். சில இடங்களில் மட்டும் மேற்கூரை வழியாக வீட்டுக்குள் இறங்கியிருக்கிறேன். 

 

திருச்சி மாவட்ட காவல்துறையினர் மட்டும் என்னை ஒரே ஒருமுறை கைது செய்திருக்கிறார்கள். அந்த வழக்கின் நீதிமன்றச் செலவுக்காகவும் திருட்டுத் தொழிலைத் தொடர்ந்து வருகிறேன். இத்தனை வருடங்களாக இதே தொழில்தான். இதுவரை காவல்துறையினர் ஓரிரு முறை மட்டுமே பிடித்துள்ளனர் என்று வாக்குமூலம் அளித்திருப்பதாகக் காவல்துறையினர் கூறினர். 

 

தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில், வெங்கடேஷ் மீது நகை, பணம் திருட்டுத் தொடர்பாக மொத்தம் 46 வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவரை பல மாவட்டங்களில் 500 பவுனுக்கும் மேல் நகைகளைத் திருடியிருப்பதும், சேலத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு நகைக்கடையில் மட்டும் 60 பவுன் வரை நகைகளை விற்பனை செய்திருப்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். 

 

இதுவரை வெங்கடேஷ் எந்தெந்த வீடுகளில் கைவரிசை காட்டியிருக்கிறார்? நகை, பணம் திருடு போனதாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். 

 

கள்ளக்குறிச்சியில் அண்மையில், ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி. வீட்டில் 15 பவுன் நகைகளை திருடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்