ADVERTISEMENT

சிதம்பரத்தில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா

10:34 PM Feb 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரதவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கியது. நாட்டியாஞ்சலி விழா பிப். 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடத்த தீட்சிதர்கள் அனுமதிக்காததால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு வீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ''பரத கலைக்கு முக்கியமானது பாவம். அந்த பாவத்தைப் புரிந்து பார்த்தால் நாட்டியத்தை நன்றாக ரசிக்க முடியும். இந்த கலை கொஞ்சம் கொஞ்சமாக திருடப்பட்டு கொண்டு செல்லப்படுகிறதோ என்ற அச்சம்; பயம் உள்ளது. பந்தநல்லூர் கிராமம் பரதநாட்டியத்தின் பெரிய ஸ்தலமாகும். பந்தநல்லூர் பின்னல் கோலாட்ட நடனம் என்பதை பந்தநல்லூர் பாணி எனக் கூறுவார்கள். தற்போது பந்தநல்லூரில் நடனமாடுபவர்கள் யாரும் இல்லை. சென்னை கலாஸ்தேத்திரத்தில் பந்தநல்லூர் பாணி என நடனம் சொல்லி கொடுக்கிறார்கள். ஆனால், பந்தநல்லூரில் நடனம் ஆடுபவர்கள் யாரும் இல்லை. கிராமங்கள், நகரங்களில் நாட்டியம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது குறைவாக உள்ளது. இக்கலை சென்னையைத் தாண்டி நியூயார்க் அல்லது வாஷிங்டன்னுக்கோ சென்றுவிடக் கூடாது. செல்லக்கூடாது என்பதை விட இப்பரதக் கலையை மொத்தமாக தாரைவார்த்து கொடுத்துவிடக் கூடாது. 2-ம் நூற்றாண்டிலிருந்து நமது பரதக்கலை தழைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இது போன்ற திரளான ரசிகர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி முக்கிய அம்சமாக திகழ்கிறது'' என்று பேசினார்.

விழாவிற்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத்தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ப.உ.செம்மல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே.சக்திவேல், சார்பு நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகன்யா ஶ்ரீ, துணைத்தலைவர்கள் ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாட்டியாஞ்சலி விழாவில் மங்களூரு என்.புட்டூர் என்.மஞ்சுநாத் பரதம், திருவனந்தபுரம் உமா கோவிந்த் & விதுன்குமார் பரதம், சென்னை தேரஜஸ் நாட்டியப்பள்ளி மாணவியர்களின் குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம், மைசூர் ஹரி ஹராநாகராஜ் மாணவ மாணவிகள் "சுதக்" நடனம். மைசூர் துர்கா நிருத்ய கலைக்கூடம் மாணவியர்கள் பரதம், சென்னை நாட்டிய குருகுலம் மாணவியர்கள் பரதம், ஊட்டி லாரன்ஸ் பள்ளி மாணவியர்கள் பரதம், சென்னை தீக்க்ஷா கிஷோர் பரதம், சென்னை மேக்னாராஜூ மற்றும் சகானா ஶ்ரீதர் பரதம், ஹைதராபாத் விஜயபால் பாத்லோத் மாணவ மாணவியர் குச்சுப்புடி நடனம், பெங்களூரு ஹரிப்பிரியா மற்றும் கார்த்தி ப்ரியா ஆகியோரின் பரதம், புதுச்சேரி அனீஷ் ராகவன் ஒடிஸி நடனம் நடைபெற்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT