
சேலத்தில் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து 4.10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, தனியார் தங்க நகை அடகு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மேலாளராக ஓமலூர் கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மதியழகன் (30) பணியாற்றி வருகிறார்.
இந்நிறுவனத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, அழகாபுரம் குடிநீர் வாரிய ஊழியர்கள் காலனியைச் சேர்ந்த அப்துல்காதர் (44) என்பவர் 28.50 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை அடகு வைத்து 1.18 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
அடுத்த நான்கு நாள்கள் கழித்து மீண்டும் வந்த அவர் 70.10 கிராம் எடையுள்ள 6 தங்க வளையல்களை அடகு வைத்து, 2.92 லட்சம் ரூபாய் கடன் பெற்றுச் சென்றார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் அடகு வைத்த நகைகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அப்துல்காதர் அடகு வைத்த நகைகள் அனைத்தும் போலியானவை என்பதும், அதன் மூலம் 4.10 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மேலாளர் மதியழகன் அழகாபுரம் காவல்நிலையத்தில் அப்துல்காதர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)