சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ஜீவானந்தம். அவருடைய அப்பா, ஜீவானந்தம் பெயரில் 1800 சதுர அடி நிலத்தை தானம் செட்டில்மெண்டாக எழுதி வைத்தார். அந்த நிலத்திற்கு அனுமதி பெறுவதற்காக சேலம் சூரமங்கலத்தில் உள்ள நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அங்கு டிராஃப்ட்ஸ்மேன் நிலை-2 அந்தஸ்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் பண்ணப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை (53) என்பவர், நிலத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமெனில் 4000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜீவானந்தம், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவினரின் யோசனையின்பேரில் இன்று பணத்துடன் சென்ற ஜீவானந்தம், மேற்பார்வையாளர் சின்னதுரையிடம் பணத்தைக் கொடுத்தார். அந்த பணத்தை நேரடியாக வாங்க மறுத்த சின்னதுரை, அங்கிருந்த புரோக்கர் சதீஸ்குமார் என்பவரிடம் கொடுக்கும்படி சொன்னார். அவரிடம் கொடுத்த பணத்தை பின்னர் சின்னதுரை பெற்றுக்கொண்டார்.
ரசாயனம் தடவிய அந்தப் பணத்தை சின்னதுரை பெறும்போது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த புரோக்கர் சதீஸ்குமாரையும் கைது செய்தனர்.