400 kg of addictive products, mini truck seized! 4 arrested!

கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம், கொளத்தூர் பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மினி லாரியில் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொளத்தூர் காரைக்காடு சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து சேலம் நோக்கி வந்த சந்தேகத்திற்குரிய மினி லாரியை மடக்கி சோதனை நடத்தினர்.

Advertisment

அந்த லாரியில் மக்காச்சோள மூட்டைகளுக்கு அடியில் மறைத்து குட்கா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 400 கிலோ போதை புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த புகையிலைப் பொருட்களையும், மினி லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மினி லாரி உரிமையாளரான கர்நாடகமாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ரஹமத்துல்லா (52), அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காதர் பாஷா (68) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Advertisment

விசாரணையில், கொளத்தூர் அங்கப்பன் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ் (30), சின்ன மேட்டூரைச் சேர்ந்த சுகைல் (24) ஆகியோரிடம் விற்பனை செய்வதற்காகக் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.