Advertisment

400 ஏக்கர் விவசாயம் நிலம் செழிக்க... இரு மாவட்ட மக்களின் பொதுப்பணி..!

கடந்த 16 ஆண்டுகள் கழித்து திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீரை, கரூர் மாவட்டம்வெள்ளியணை பெரிய குளத்திற்கு நீரேற்றம் செய்ய, முழுமுயற்சியுடன் இரண்டு மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து, வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மழைக் காலங்களில் விவசாயத் தேவைக்குப் பயனளிக்கும் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக வறண்டு விவசாயம் செய்ய முடியாத பூமியாக உள்ளது.

Advertisment

இதற்குப் பிரதான காரணம் திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டாமல் போனதால் வெள்ளியணை பெரியகுளத்தில் நீர் நிரம்பவில்லை.

குடகனாறு ஆற்றிலிருந்து வரும் துணை வாய்க்கால், கடந்த 16 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் புதர்மண்டி கிடக்கிறது. குடகனாறு அணை, திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் அழகாபுரி அருகே உள்ள கூம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குடகனாறு, கூம்பூர் பகுதியில் துவங்கி ஈசநத்தம், ஆர்.வெள்ளோடு, தம்மநாயக்கண்பட்டி வழியாக பாகநத்தம், சின்ன மூக்கனாங்குறிச்சி, பிச்சம்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, டி.கூடலூர் பகுதியைக் கடந்து பல கி.மீ பயணித்து கரூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது. இறுதியாக துணை வாய்க்கால் மூலம் வெள்ளியணை பகுதி கடைமடையை வந்தடைகிறது.

குடகனாறு அணையிலிருந்து துணை வாய்க்கால் வழியாக வெள்ளியணை பெரியகுளத்துக்கு இடைப்பட்ட தூரம் 54 கிலோமீட்டர். திண்டுக்கல் - கரூர் மாவட்டங்களில் விவசாயம் செழிப்பாக இருக்க, குடகனாறு மிக முக்கியப் பங்காற்றி வந்த நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு துணை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதர் மண்டி கிடக்கும் துணை வாய்க்காலை தூர் வாருவதற்கு வெள்ளியணை பகுதி மட்டுமின்றி இரண்டு மாவட்ட பொதுமக்களும்இணைத்து கடந்த ஒரு வாரமாக தூர்வாரி வருகின்றனர்.

தற்பொழுது 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், விவசாயிகள், தன்னார்வ இளைஞர்கள் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிபலனின்றி வெள்ளியணை கடைமடை பெரிய குளத்திற்குத் தண்ணீர் நிரப்புவதற்குத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து வெள்ளியணை ஊராட்சிமன்றத் தலைவரும், குடகனாறு பாதுகாப்புக்குழு செயற்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், “கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடகனாறு அணை நிரம்பி அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக 54 கிலோமீட்டர் இடைப்பட்ட தூரத்தில் உள்ள வாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே புதர் மண்டிக் கிடப்பதை தூர்வாரி வருகின்றனர். குடகனாறு ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு வந்து சேர்க்க முழு முயற்சியுடன் பணியாற்றி வரும் நிலையில், தற்போது 39 கி.மீ தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தங்களது பங்களிப்பை முழு ஆர்வத்தோடு ஒத்துழைப்பு அளித்து வருவதால் இது சாத்தியமாயிற்று. இன்னும் மூன்று நாட்களில் முழுமையாக துணை வாய்க்கால் பகுதியைக் கடந்து வெள்ளியணை பெரியகுளத்தில் தண்ணீர் நிரப்பும் முழு முயற்சியில் இருக்கிறோம். அப்படி வெள்ளியணை பெரியகுளம் முழுவதுமாக நிரம்பினால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பல ஆண்டு காலமாக எங்களது குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும். அதுமட்டுமின்றி நீர்ப் பிடிப்பு அதிகமாகி இதன் எதிரொலிப்பு அய்யர்மலை வரை இருக்கும்” என்றார்.

வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த சரவணன், “குடகனாறு அணையிருந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பி உள்ளது. உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முழு ஈடுபாட்டுடன் துணை வாய்க்காலை தூர் வாரி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பின் கடைமடை பகுதி விவசாயிகள் பாசன வசதி பெற உள்ளனர். மேலும், வெள்ளியணை பெரியகுளமும் நிரம்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மழைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் குடகனாறு அணை நிரம்பும் நேரங்களில் அரசு, உபரி நீரை தவறாமல் திறந்துவிட்டால், எங்கள் பகுதி விவசாயம் செழிப்பதுடன், எங்களது குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும். எனவே, தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மழைக்காலங்களில் அணையிலிருந்து உபரி நீரைத் திறந்துவிட்டு உதவவேண்டும்” என்றார்.

karur Dindigul district
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe