
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (54), சென்னையில் என்டர்பிரைசஸ் என்ற கம்பெனி வைத்து நடத்திவருகிறார். இவர், தமிழ்நாடு முழுக்க தனது தொழிலை செய்துவருகிறார். மேலும், தொழிலில் வரும் பணத்தை வசூல் செய்வதற்காக அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்குச் சென்றுவருவார். அந்த வகையில் பணம் வசூல் செய்வதற்காக திண்டிவனத்திற்கு வந்த பூபாலன், ஒரு கடையில் தமக்கு வர வேண்டிய பணம் 40 ஆயிரம் ரூபாயும், மற்றொரு கடையில் 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வசூல் செய்து தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு மாரியம்மன் கோயில் தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென அவரை வழிமறித்தனர். அவரிடம் தாங்கள் போலீஸ்காரர்கள் எனக் கூறி அவரிடம், ‘உங்கள் மீது சந்தேகமாக உள்ளது. உங்களைப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று அவருடைய பையில் சோதனை செய்துள்ளனர். மேலும் அவரை கஞ்சா கடத்தல்காரரா என்று கூறியும் மிரட்டியுள்ளனர். அவரது பேண்ட் சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு ஆராய்ந்துள்ளனர். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வசூல் செய்து வைத்திருந்த 55 ஆயிரம் பணத்தை எடுத்து, ‘இதுபோல் பணத்தை சாதாரணமாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லக்கூடாது. பேக் உள்ளே வைத்து கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும்’ எனக் கூறியவர்கள், அவரது பேக்கில் அந்தப் பணத்தை வைப்பது போல நடித்து, 55 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து சந்தேகமடைந்த பூபாலன், தனது பேக் உள்ளே பார்த்தபோது பணம் இல்லை. போலீஸ் என கூறியவர்கள், தனது 55 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டிவனம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபாலனிடம் விசாரணை செய்தனர். அடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களைப் போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள். கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.