/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6540.jpg)
மனைவி பற்றி ஆபாசமாக பேசியதால் திமுக பிரமுகரை வாயை வெட்டி, கண்ணை தோண்டி கொலை செய்ததாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகளத்தூர் அடுத்த கலெட்டிபேட்டை காந்திநகரை சேர்ந்த திமுக பிரமுகர் கிரிராஜன் (42). நந்தம்பாக்கம் பகுதியில் சென்ற கிரிராஜனை ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பாபு போலீசாரிடம், எனக்கு திருமணம் ஆகி மனைவி, 4 மகள்கள் உள்ளனர். என் வீட்டின் அருகில் கிரிராஜன் வீடு உள்ளது. நாங்கள் இருவரும் உறவினர்கள். நிலம் விற்பனை தொழில் செய்து வந்தோம். மேலும் ரவுடிகளுடன் சேர்ந்துகொண்டு கட்டப்பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டு வந்தோம். சிறுகளத்தூர் ஊராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கிரிராஜன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் என்னுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.
எனது மூத்த மகளை, கிரிராஜனின் மைத்துனர் மோகன்(26) காதலித்து வருவது தெரிய வந்தது. இதனால் அவசர அவசரமாக விருகம்பாக்கத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்தேன். இந்தநிலையில் மகள் வீட்டை விட்டு வெளியேறி மோகனை திருமணம் செய்தார். இது எனது உறவினர்கள் மத்தியிலும், ஊரார் மத்தியிலும் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது.
திருமணமான அவர்களை வேண்டுமென்றே எனது வீட்டின் அருகிலேயே குடியேறவைத்தார். ஆரம்பத்தில் மகளை மட்டுமே கொடுத்தால் போதும் என்று கூறி வந்த கிரிராஜன், மகளின் திருமணத்திற்கு பின், அவளுக்கான சீர் மற்றும் நகைகளை கேட்டு, என்னை தினமும் தொந்தரவு செய்ய தொடங்கினார்.
நான் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சாலையில் நடந்து செல்லும் போது, கிரிராஜன் எங்களை கேலி, கிண்டல் செய்தார். மகள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் நான் எனது மகளிடம் பேசேவில்லை. எனது மனைவி மற்றும் மகள்கள் ஆகியோர் சவுபாக்கியவதியிடம் பேசி வந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கிரிராஜன், மகளுக்கு நகைகள் போட வேண்டும் என்றார்.
நான் கொடுக்க சம்மதிக்காததால், நகைகள் கேட்டு மிரட்டத் தொடங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னிடம் பேசிய கிரிராஜன், ‘ என் மகளுக்கான நகைகளை என்னிடம் கேட்டார். அப்போது நான், ‘’ என் பேச்சை மதிக்காதவளுக்கு நான் தகப்பனும் இல்லை. அவள் எனக்கு மகளும் இல்லை. நகை ஒன்றும் தர முடியாது’ என்றேன்.
அதற்கு கிரிராஜன், அவள் உனக்கு மகள் இல்லையென்றால் உனது மனைவி அவளை யாருக்கு பெற்றெடுத்தாள்’’ என்று ஆபாசமாக பேசினார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். கிரிராஜனை கொல்ல திட்டமிட்டேன். நண்பர்களிடம் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறினேன். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி கொன்றேன்.நண்பர்கள் 3 பேருடன் நந்தம்பாக்கம் அஞ்சுகம் நகரில் பதுங்கி இருந்தேன். அங்கிருந்தபடி நண்பரில் ஒருவரை கிரிராஜனை போனில் தொடர்பு கொள்ளசெய்து, மகளுக்கான நகைகள் தருகிறோம் தனியாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி, நாங்கள் இருக்கும் இடத்தையும் கூறினேன்.
இதையடுத்து கிரிராஜன் வந்தார். அப்போது நான், நண்பர்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து கிரிராஜனை அரிவாளால் சரமாரி வெட்டினோம். கிரிராஜன் தப்பியோடியபோது அவரை விரட்டி, விரட்டி வெட்டினோம். இந்த வாய்தானே என் மனைவியை தவறாக பேசியது என்று சொல்லி அவரது வாயில் வெட்டினேன். கிரிராஜன் இறந்த பிறகும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. என் மகளை என்னிடம் இருந்து பிரித்தது, என் மனைவியை ஆபாசமாக பேசியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகையால்கத்தியால் அவரது இரண்டு கண்களையும் தோண்டி எடுத்தேன். இவ்வாறு பாபு கூறினார். பாபு உள்பட 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர் போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)