மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்குச் சொத்து வரியைக் குறைவாக நிர்ணயித்து 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன் உதவி வருவாய் ஆய்வாளர் குமார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் மண்டல தலைவர்களாக இருந்த பாண்டி செல்வி, சரவண புவனேஸ்வரி, சுபிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இத்தகைய சூழலில் தான் இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான மூர்த்தி,  பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநகராட்சியின் ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் கடந்த 7ஆம் தேதி (07.07.2025) விசாரணை நடத்தினர். அதாவது மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்களாக இருந்த பாண்டிச்செல்வி, சரவண பூவனேஸ்வரி, சுமிதா மற்றும் முகேஷ் சர்மா ஆகிய 4 பேரும், மேலும் நகரமைப்பு மற்றும் வரிவிதிப்பு குழு தலைவர்களான மூவேந்தன் மற்றும் கரன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் சரவண புவனேஸ்வரி, பாண்டிசெல்வி, சுபிதா,முகேஷ் சர்மா ஆகிய 4 மண்டல ராஜினாமா செய்தனர். அதோடு மேயர் இந்திராணிக்கு அமைச்சர் நேரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.

மேலும் வரிவிதிப்பு குழுவின் 2  உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் குறித்து மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த முறைகேட்டில் யார் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு 7 தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும்  4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரிவிதிப்பில் பில் கலக்டராக இருந்த தற்காலிக ஊழியர்கள், நிரந்தர பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.