Skip to main content

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்கள்; தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 19/03/2023 | Edited on 19/03/2023

 

4 minors drowned; Tamil Nadu Chief Minister Relief Notification

 

சிவகங்கை மற்றும் மயிலாடுதுறையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

நேற்று சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள கோவிலில் குளத்தில் லட்சுமணன் என்பவரின் மகன் சந்தோஷ் (7) மற்றும் ஒரு சிறுமி உட்பட 3 பேர் குளத்தில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்த பொழுது மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவன் நீருக்குள் மூழ்கி விட, சிறுவனை காப்பாற்ற சந்தோஷ் என்ற சிறுவனும் அதனைத் தொடர்ந்து சிறுமி ஒருவரும் குளத்தில் இறங்கியுள்ளனர்.

 

இதில் மூன்று பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதில் ஒரு சிறுவனின் உடல் ஊரணியில் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், அந்த இடத்தில் வந்து பார்த்த பொழுது சிறார்களின் ஆடைகள் குளத்தின் படித்துறையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக குளத்தில் இறங்கி மூன்று பேரின் சடலமும் மீட்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறார்களின் உடல்களை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அபினேஷ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். 4 சிறார்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.