Skip to main content

விவசாயியைக் கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

Kallakurichi

 

வாகனத்தில் லேசாக மோதிய ஒருவரைக் கொலை செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திலவேந்திரன் மகன் சின்னப்பன் (35). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தனது பைக்கில் தனது பையில் மாடுகளுக்கு தீவனமாக கரும்பு சோலையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் வாகனம் மீது இவரது வாகனம் லேசாக மோதி உள்ளது. ஆனால் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றபோதும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது பிறகு அது மோதலாக மாறியுள்ளது. அப்போது அங்கிருந்த ஊர் பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 

இருப்பினும் சின்னப்பன் மீது ஆத்திரம் தீராத கோவிந்தன் தனது சகோதரர்கள் குமார் வேடப்பன், தணிகை நாதன் ஆகியோருடன் சின்னப்பன் வீட்டிற்குச் சென்று சின்னபனிடம் தகராறு செய்ததோடு அவரை உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர் தாக்குதலினால் சின்னப்பன் உயிரிழந்துவிட்டார்.

 

இதுதொடர்பாக சின்னப்பன் மனைவி செல்வமேரி, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கோவிந்தன் உட்பட அவரது சகோதரர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

 

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி செங்கமல செல்வன் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அந்தத் தீர்ப்பில் சின்னபனை கொலை செய்த நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் வேலவன் ஆஜரானார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அந்த 4 பேரும் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சாதாரண கரும்பு சோலை மேலே இடித்தன் காரணமாக ஏற்பட்ட சின்ன பிரச்சனை கொலை வரை சென்றதோடு நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது. ஆத்திரம் அழிவைத் தரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் என்று கூறுகிறார்கள் சோழ பாண்டிபுரம் கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

சாமி சிலைகள் சேதம்; பொதுமக்கள் போராட்டம்       

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

கள்ளக்குறிச்சி  மாவட்டம் சின்னசேலம் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடி கிராமத்தின் எல்லையில் கன்னிமார் கோயில் உள்ளது. இந்தக் கோவில் சாமிகளை சேலம் மாவட்டம் ஊனத்தூர் மற்றும் அப்பகுதியில் உள்ள பல கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இரு வேறு சமூகத்தினருக்கு கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 10 வருடமாக பூசை நடத்தப்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வழிபாடு நடத்திய மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் எட்டாவது நாளான நேற்று ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். 

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

காரணம் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் கோவிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டியதாக கூறுகின்றனர். அப்போது கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் உடைந்தும் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் அருகே அமர்ந்து மரத்தை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பின்பு இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிலில் வழிபாடு நடத்தும் மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு‌ இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

 

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று அமர்ந்திருந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதாக கூறியதையடுத்து கோவில் முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். சின்னசேலம் போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். மரங்களை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது