4 female students drowned; Tamil Nadu Government Relief Notification

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 81 மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 13 மாணவிகள் மாநில அளவிலான குடியரசு தின வாலிபால் போட்டிக்காகஇடைநிலை ஆசிரியர் செப சகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியை திலகவதி ஆகியோர் பாதுகாப்பில் திருச்சி மாவட்டம் தோளூர்பட்டி கிராமத்தில் உள்ளகொங்குநாடு பொறியியல் கல்லூரியில் உள்ள விளையாட்டுத்திடலில் நடந்த போட்டியில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர்.

Advertisment

இன்று புதன்கிழமை காலை நடந்த மாநில அளவிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில் பிலிப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று ஊருக்கு திரும்பியபோது கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டு அருகே உள்ள கோயிலில் தரிசனம் செய்த பிறகு காவிரி ஆற்றில் விளையாட்டு உடைகளுடனேயே இறங்கி குளித்துள்ளனர். அப்பொழுது ஒரு மாணவியை தண்ணீர் இழுத்துள்ளது. அந்த மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற மாணவிகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் பிலிப்பட்டி வெள்ளைச்சாமி மகள் சோபியா (7ம் வகுப்பு), ராஜ்குமார் மகள் தமிழரசி (8ம் வகுப்பு), மோகன் மகள் இனியா (6ம் வகுப்பு) பெரியண்ணன் மகள் லாவண்யா (6ம் வகுப்பு) ஆகிய 4 மாணவிகளும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கரையில் நின்ற மற்றவர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் வந்து 4 மாணவிகளையும் சடலமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஒரே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளின் 4 குழந்தைகளும் ஒரே நேரத்தில் தண்ணீரில்அடித்துச் செல்லப்பட்ட தகவல் அறிந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர்களை அந்த நிறுவன வேனில் அழைத்து வந்தனர். பள்ளியில் திரண்ட பெற்றோர்களும், உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். பலர் மயக்கமடைந்துள்ளனர். பள்ளிக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பெற்றோர்களையும் உறவினர்களையும்தேற்றி வருகின்றனர்.

Advertisment

எங்கள் குழந்தைகள் விளையாட்டில் வெற்றி பெற்று வந்து வெற்றி விழா கொண்டாடனும் என்று சொல்லிட்டு போனாங்களே இப்ப வெற்றி மாலைக்கு பதிலா வேற மாலை போடுற மாதிரி ஆகிடுச்சே என்று கிராமமே சோகத்தில் கதறித் துடிக்கின்றனர். ஒரே பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த நான்கு சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் மாணவிகளைப் பாதுகாக்கத்தவறிய பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் செப சகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியை திலகவதி ஆகிய மூன்று பேரையும்சஸ்பெண்ட் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.