ADVERTISEMENT

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

05:33 PM Apr 22, 2024 | kalaimohan

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT