
சேலம் அருகே, கூலித்தொழிலாளியைக் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தையொட்டி இருந்த புதர் பகுதியில், கடந்த 11ஆம் தேதி நிர்வாண நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே காவல் நிலைய காவல்துறையினர் கைப்பற்றினர்.
விசாரணையில், சடலமாகக் கிடந்தது அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு (45) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. ஆரம்பத்தில் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தாலும், பின்னர் காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் குழந்தைவேலுவை அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. நிகழ்விடத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
சம்பவம் நடந்த நாளில் குறிப்பிட்ட பகுதியில் சந்தேகப்படும் வகையில் நான்கு பேர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை (நவ. 13), அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், அயோத்தியாப்பட்டணம் கே.எம்.நகரைச் சேர்ந்த மணி மகன் தேவேந்திரன் (25), வரதராஜன் மகன் சதீஸ்குமார் (23), அனுப்பூரைச் சேர்ந்த அய்யனார் மகன் தீபன்குமார் (22), மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் (21) என்பது தெரியவந்தது.

இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று இரவு அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்தையொட்டி உள்ள புதர் மறைவில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அதே இடத்திற்கு, கொலையுண்ட குழந்தைவேலுவும் வந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் குழந்தைவேலு, கைதான மேற்படி நான்கு பேரையும் ஆபாசமாக திட்டியுள்ளார். இதை அவர்கள் கண்டித்துள்ளனர். அதற்கு குழந்தைவேலு அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் குழந்தைவேலுவை கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த நேரத்தில் குழந்தைவேலு அணிந்திருந்த சட்டையும், பேண்ட்டும் தானாகவே கழன்று விழுந்துள்ளது. அதனால் நிர்வாண நிலையில் கிடந்த அவருடைய உடலைப் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான நான்கு பேரையும் நிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்று, சம்பவத்தன்று என்னென்ன நடந்தது என்பதை நடித்துக் காட்டச் சொல்லி வீடியோவாக பதிவுசெய்துகொண்டனர். இதையடுத்து அவர்களை சேலம் 5வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் அனைவரையும் ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.