Skip to main content

39 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தார்ச் சாலை தரமில்லை; இளைஞர் - கவுன்சிலர் வாக்குவாதம் 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

39 lakhs, the asphalt road laid is not of good quality

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டியில் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 39 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் அளவிலான தார்ச் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்ச் சாலை 25 இன்ச் அளவில் போடப்பட வேண்டும் ஆனால் இந்த தார்ச்சாலை 10 இன்சுக்கும் குறைவாக போடப்பட்டுள்ளது. இந்த தார்ச்சலையை இந்து அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள்  தங்களுடைய கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்று உள்ளதாக குற்றம் சாட்டினர். இந்த தார்ச் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்தும் வீசி எறிந்தனர்.

 

அப்போது திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடமும் பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒரு மணி நேரம் தங்களுக்கு தாருங்கள் ஒரு கிலோ மீட்டர் அளவில் போடப்பட்ட  தார்ச் சாலையை கைகளால் நோண்டி எடுத்து விடுகிறோம் எனவும் ஆதங்கமாக பேசினர். 

 

இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பானது. தரம் இல்லாத சாலையை போட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.