37 pawn gold theft case

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த புலிவலம் காவல் சரகதிற்குட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ஜெயராணி (55). இவர்களுக்கு கோபி என்ற மகன் உள்ளார். கோபி மனைவி அன்னபூரணி. கோபி கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் ஜெயராணி, மருமகள் அன்னபூரணி ஆகியோர் வசித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று அன்னபூரணி தனது சொந்த ஊரான எதுமலை அடுத்த தேனூருக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜெயராணி நேற்று மதியம் 2 மணியளவில் தபால் நிலையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். வீட்டை பூட்டி விட்டு, வீட்டு சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார். தனது பணிகளை முடித்து மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு திரும்பும்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisment

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ திறக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 37 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுபற்றி புலிவலம் காவல் நிலையத்தில் ஜெயராணி புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பட்டப்பகலில் வீட்டில் 37பவுன் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன் பெரமங்கலம் கிராமத்திலும் பகலிலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய நிலையில், பட்டப்பகலிலேயே நடைபெறும் திருட்டு சம்பவங்களால் புலிவலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisment