
சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்டினத்தில் நேற்று (27.05.2025) இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாகப் பழுது ஏற்பட்டது. இதனால் ராட்டினத்தில் இருந்த சுமார் 36 பேர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் தொங்கியபடி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து பொழுதுபோக்கு பூங்காவிற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 50க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி 36 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதோடு மருத்துவ குழுவினர் உதவியுடன் முதலுதவியும் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீலாங்கரை காவல்துறை சார்பில் விளக்கம் கேட்டு பொழுது போக்கு பூங்காவின் பொதுமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பூங்கா செயல்படுவதற்கான அனுமதி கடிதத்திற்கான, பழுது ஏற்பட்டதற்கான காரணங்கள், பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே பொழுது போக்கு பூங்கா நிர்வாகத்தினர் இந்த நோட்டீஸ் மீது அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு பூங்காவைத் திறப்பதற்கு தற்காலமாகத் தடை விதித்தது காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பூங்கா நிர்வாகத்தினர் உரிய விளக்கம் அளித்து அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர் பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.