“35th victim to online gambling; Governor should give approval without further delay” - Anbumani stressed

Advertisment

“ஆன்லைன் சூதாட்டத் தடைசட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய வினாக்களுக்கு கடந்த நவம்பர் 25-ஆம் தேதியே தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன்பிறகும் இரு வாரங்களாகிவிட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடைசட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பொள்ளாச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் சல்மான் என்ற இளைஞர் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் கடந்த காலங்களை விட மிக அதிக வேகத்தில் உயிர்களைப் பலிவாங்கத் தொடங்கியுள்ள நிலையில், அதைத்தடை செய்வதற்கான சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

பொள்ளாச்சி அருகிலுள்ள கிணத்துக்கடவு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சல்மான். இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்த சல்மான், அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆன்லைனில் சூதாடி இழந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து மீள முடியாத சல்மான், அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடியிருக்கிறார். இவ்வாறாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சல்மான், அவரது வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

ஆன்லைன் சூதாட்டத்திற்குத்தடை விதித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின்னர் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 35 ஆகும். கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கும் நிலையில், அதைத்தடை செய்வதற்கான முயற்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்பது தான் மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தைத்தடை செய்வதற்காகப் போராட்டம், பரப்புரை உள்ளிட்ட பல இயக்கங்களைபாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வருகிறது. கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் சென்னையில் பா.ம.க நடத்தியது. அதன் பயனாகவேஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் என்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று அடுத்த 3 வாரங்களுக்குள் ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்க முடியும் என்றாலும் கூட, 109 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 26-ஆம் தேதி தான் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்பின் அக்டோபர் 1-ஆம் தேதி அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டாலும் கூட, அது நடைமுறைக்கு வராமலேயே நவம்பர் 27-ஆம் தேதி காலாவதியானது.

அதற்கு முன்பாக தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 18-ஆம் தேதி, அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின் 53 நாட்களாகி விட்ட நிலையில் இன்று வரை ஆன்லைன் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒருபுறம் அவசரச் சட்டம் காலாவதியாகி விட்டது.மறுபுறம் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் ஆன்லைன் சூதாட்டங்கள் முழு வீச்சில் தொடங்கியிருக்கின்றன. கோடிக்கணக்கில் பரிசுகளை வெல்லலாம் என்று ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரம்செய்வதால் விட்டில் பூச்சிகளைப் போல மீண்டும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி காலாவதியான பின்னர், 10 நாட்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளின் வேகம் அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களைத்தடை செய்வதன் மூலமாக மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத்தடுக்க முடியும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய வினாக்களுக்கு கடந்த நவம்பர் 25-ஆம் தேதியே தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன்பிறகும் இரு வாரங்களாகிவிட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாகஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து தமிழக மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.