/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/249_6.jpg)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணான அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு நாட்களுக்கு முன் அவருக்குப்பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதால் மூன்றாவது பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலையில் அவர் இருந்துள்ளார். இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவர் குழந்தையினை விற்றால் 3.50 லட்சம் கிடைக்கும் எனக் கூற குழந்தையின் தாயும் சம்மதித்துள்ளார். இதனையடுத்துஈரோட்டினை சேர்ந்த தனது தோழியான லதாவை வளர்மதி அணுகியுள்ளார்.
லதா சேலத்தில் உள்ள விவசாயி அன்பு என்பவரைத்தொடர்புகொண்டு பெண் குழந்தை உள்ளதாகத்தெரிவித்துள்ளார். 5 லட்சம் தந்தால் குழந்தையைக் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு அன்பு சம்மதித்துள்ளார்.
இதற்குசில தினங்கள் முன்பு விவசாயி அன்பு லதாவினை தொடர்புகொண்டு குழந்தையினை கேட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் இடைத்தரகர்கள் விவசாயி அன்பு என்பவரிடம்பெண் குழந்தையினைக் கொடுக்க சேலம் வந்துள்ளனர்.
இதனிடையே பிறந்த குழந்தையைச் சட்ட விரோதமாக விற்க முயன்றதாக சேலம் மாவட்ட மாநகரக் காவல்துறையினருக்கு புகார் வந்தது. தகவலின் பேரில் சேலம் சீலநாயக்கன்பட்டிக்குச் சென்ற காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சீலநாயக்கன்பட்டி பகுதியில் பெண் ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்தபோது அவர்களைக் கண்காணித்த காவல்துறையினர் அவர்களைப் பிடித்தனர்.
பிடிபட்ட மூவரையும் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து பெண் குழந்தையினை மீட்ட காவல்துறையினர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர்களை விசாரித்தபோது வளர்மதி மற்றும் லதா ஆகியோர் ஈரோடு தனியார் மருத்துவமனை ஒன்றில் சட்ட விரோதமாகக் கருமுட்டை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)