மாஜி படை வீரரிடம் 35 லட்ச ரூபாய் சுருட்டல்; போலி பணி நியமன ஆணை கொடுத்த பாஜக நிர்வாகி அதிரடி கைது!

35 lakh rupees from ex-serviceman; BJP executive arrested for giving fake appointment order!

மேச்சேரி அருகே, முன்னாள் ராணுவ வீரரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 35 லட்சரூபாய் சுருட்டிய புகாரின் பேரில் பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி சாம்ராஜ் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜூ. முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மகன் சந்திரமோகன். எம்.எஸ்.சி. பட்டதாரி. அக். 21ம் தேதி, ராஜூ தனது மகனுடன் வந்து சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது: மேச்சேரி அருகே உள்ள கோல்காரனூரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர், பா.ஜ.க.வில் சேலம் மேற்கு மாவட்ட ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளராக இருக்கிறார். அவர், வருமானவரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் என் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்று கூறியதன் பேரில், கடந்த 2022ம் ஆண்டு, கமலக்கண்ணனிடம் அத்தொகையைக் கொடுத்தேன்.

இதையடுத்து அவர் என் மகனை டெல்லிக்கு அழைத்துச் சென்று வருமானவரித்துறை பணிக்காக தேர்வு எழுத வைத்தார். பின்னர் தனியார் தங்கும் விடுதியில் வைத்து என் மகனின் கல்விச்சான்றிதழ்களை அவர் அனுப்பிய ஆள் ஒருவர் வந்து சரிபார்த்துவிட்டுப் போனார்.

35 lakh rupees from ex-serviceman; BJP executive arrested for giving fake appointment order!

அதன்பிறகு, என் மகனிடம் கமலகண்ணன் வருமானவரித்துறையில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி, நியமன ஆணை கடிதம் ஒன்றை வழங்கினார். ஆனால் என் மகனை பணியில் சேர விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த பணி நியமன ஆணையை எடுத்துச்சென்று சேலம் வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, அது போலியானது என்பது தெரிய வந்தது.

இதே கமலக்கண்ணன்தான், கடந்த 2014ம் ஆண்டு என் மகனுக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 25 லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றார். அப்போதும் 2 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கிதான் அந்தப் பணத்தைக் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தரவில்லை.

அப்போது ஏமாற்றியவர், அதற்கு பரிகாரமாக வருமான வரித்துறையில் எப்படியும் வேலை வாங்கித் தந்து விடுவார் என்ற நம்பிக்கையின் பேரில் தான் அவரிடம் மீண்டும் பணம் கொடுத்தேன். மொத்தமாக என்னிடம் 35 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட கமலகண்ணன், அரசு வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டு சென்றால், அவர் இழுத்தடித்து வருவதோடு, எங்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜூ புகார் மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் மீது மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் முதல்கட்ட விசாரணை நடத்தியதில் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கமலக்கண்ணன் மீது, இதரபிரிவுகள் 420 (மோசடி), 468 (போலி ஆவணம் தயாரித்தல்), 470 (எலக்ட்ரானிக் உபகரணம் மூலம் போலி ஆவணம் தயாரித்தல்), 471 (போலி ஆவணம் எனத்தெரிந்தும் அதை உண்மையான ஆவணம் என்று கூறி சமர்ப்பித்தல்), 472 (போலி அரசு முத்திரை பயன்படுத்துதல்), கொலை மிரட்டல் (506 (2)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

35 lakh rupees from ex-serviceman; BJP executive arrested for giving fake appointment order!

கமலக்கண்ணன் பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் உள்ளதால், அரசியல் பின்புலத்துடன் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவரை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரம் காட்டினர். டி.எஸ்.பி. மேற்பார்வையில் எஸ்.ஐ. செந்தில்குமரன் தலைமையிலான தனிப்படையினர் கமலக்கண்ணனை தேடி வந்தனர்.

காவல்துறையில் சிக்கி விடாமல் இருக்க கமலக்கண்ணன் திருச்சிக்கு தப்பிச்சென்றார். பின்னர் அவர் அக். 24ம் தேதி காலை 8 மணியளவில், மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி அருகே வந்தபோது காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். காவல்துறையினர் அழைத்து வந்தபோது, திடீரென்று அவர்கள் பிடியில் இருந்து நழுவி தப்பிச்செல்ல முயன்றார். எஸ்.ஐ. செந்தில்குமரன் துரத்திச்சென்று அவரை மடக்கினார். காவல்துறை வாகனத்தில் ஏற முடியாது என சட்டையைக் கிழித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளது.

அவரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இப்போதைக்கு ராஜூவிடம் வாங்கிய பணத்தில் பாதியை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்ற கூறிய கமலக்கண்ணன், அவர் தரப்பில் 6 வழக்கறிஞர்கள் வந்து சேர்ந்த பிறகு, பணமெல்லாம் தர முடியாது; வேண்டுமானால் சிறையில் போடுங்கள் என்று தெனாவட்டாக பேசியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரித்தபோதுதான், ராஜூவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இதையடுத்து கைதான கமலக்கண்ணனை காவல்துறையினர், அக். 24ம் தேதி மாலை, சேலம் 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பிடிபட்ட கமலக்கண்ணன், பலரிடம் அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலின் பேரிலும் பல கோடி ரூபாய் பணம் வசூல் செய்துவிட்டு ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கமலக்கண்ணன், பா.ஜ.க. ஓபிசி பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Salem
இதையும் படியுங்கள்
Subscribe