தமிழக அரசின் சார்பில் நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 33 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கரூர், நாமக்கல், தேனி, ராணிப்பேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை மற்றும் திருவள்ளூர் ஆகிய 8  மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (14.07.2025)  பிறப்பித்துள்ள உத்தரவில், “திருப்பத்தூர்  மாவட்டத்திற்கு சியாமளா தேவியும், கரூர் மாவட்டத்திற்கு கே.ஜோஷ் தங்கையாவும், நாமக்கல் மாவட்டத்திற்கு எஸ். விமலாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேனி மாவட்டத்திற்கு புக்யா ஸ்னேக பிரியாவும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அய்மான் ஜமாலும், அரியலூர் மாவட்டத்திற்கு விஸ்வேஷும், வேலூர் மாவட்டத்திற்கு ஏ. மயில்வாகனனும், சிவகங்கை மாவட்டத்திற்கு ஆர். சிவபிரசாத்தும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதே போன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு விவேகானந்த சுக்லாவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஜி.எஸ். மாதவனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட (சிவகங்கை எஸ்.பி.யாக இருந்தவர்) ஆஷிஷ் ராவத்  காவல்துறையின் சென்னைத் தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக  நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூர் திருமலா பால் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான கொளத்தூர் துணை ஆணையராக இருந்தவர்பாண்டியராஜன் தமிழகக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு பட்டாலியன் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.