Advertisment

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 327 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பு! விடுதலையும், தண்டனைக் குறைப்பும்..

HIGHCOURT

Advertisment

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில்,கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மேலும் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை உறுதி செய்தும்தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த கவுசல்யா, கல்லூரியில் தன்னுடன் படித்த வேறுஜாதியை சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில்,கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதிகவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில்,மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில்,சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

Advertisment

இதுதொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்

கடந்த 2017,டிசம்பர் 13-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த திருப்பூர் நீதிமன்றம், குற்ற விசாரணை முறைசட்டப்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்துவதற்காக, வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.அதேபோல, தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, இந்த அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர்.

மொத்தம் 327 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பில், வழக்கில் முதல் எதிரியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

அதேசமயம், இந்த வழக்கில் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல்ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும்,தண்டனைக் குறைப்பு ஏதும் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில், திருப்பூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய இருவரின் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும், திருப்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் கூலிப்படையை சேர்ந்த பிரசன்னா ஆகியோரின் விடுதலையை உறுதி செய்த நீதிபதிகள், அவர்களின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

highcourt udumalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe