
குமரி மாவட்டத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ரப்பர் தோட்ட தொழிலாளா்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டதால் 300 பேர் கைது செய்யபட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து தொழிலாளா்களிடம் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக தொழிலாளா்களும் அரசு ஊழியா்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ரப்பர் தோட்டம் உள்ள ஓரே மாவட்டம் குமரி மாவட்டம். இங்கு கீரிப்பாறை, மணலோடை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், களியல், ஆலம்பாறை, பிறாவிளை, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ரப்பா் தோட்டத்தில் தற்போது 2500 தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு அடிக்கடி போராடி வரும் நிலையில் அரசு அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறி போராட்டத்தை வாபஸ் வாங்க வைப்பதும் அதன் பிறகு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதும் அரசு வழக்கமாக கொண்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த தொழிலாளர்கள் தொடார் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொழிலாளா்கள் அனைத்து கட்சி தோட்ட தொழிற்சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் 300 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தொழிலாளா்களுக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.