
தமிழகத்தின் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் செல்வதன் மூலம் இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்த அவர் தற்போது தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100கிமீ வேகத்திற்கும் அதிகமாகச் சாலையில் சென்றதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர், இன்று நடைபெற்ற ஒரு சம்பவத்தின் காரணமாக மீண்டும் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரின் அலுவலக திறப்புக்காகக் கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதிக்கு அவர் வந்த நிலையில், போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவரைக் காண அவரது ரசிகர்கள் திரண்டனர்.
அவரைக் காண வந்த இளைஞர்கள் பைக்கை தாறுமாறாக ஓட்டி வந்த நிலையில் பல இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய சுமார் 300 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.