300 kg of ganja seized; Northern State youths caught - shock in Chennai

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், அதனை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரி மூலம் கடத்திகொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அனகாபுத்தூர் புறவழிச்சாலை பகுதியில் வழக்கம்போல போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஈச்சர் சரக்கு வாகனம் ஒன்று வந்தது. தணிக்கைக்காக போலீசார் அதை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில் நிற்காமல் அங்கிருந்து பறந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட சரக்கு லாரியை பின் தொடர்ந்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சரக்கு லாரியானது அருகிலேயே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டது. ஏன் வாகனத்தை நிறுத்தாமல் போனீர்கள் என போலீசார் கேள்வி எழுப்ப, வாகனத்தில் டீசல் குறைவாக இருந்ததால் அவசரமாக வந்து விட்டோம் என மழுப்பியுள்ளனர். உடனடியாக காவலர் ஒருவர் சரக்கு வாகனத்தின் டீசல் டேங்க்கை ஆய்வுசெய்தபோது அதில் அரை டேங் டீசல் இருந்தது.

Advertisment

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இவர்கள் எதையோ மறைக்க நினைப்பதாக எண்ணி சரக்கு வாகனத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது திராட்சை, தக்காளி கொண்டுசெல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள் காலியாக இருந்தது. அதேநேரம் வண்டியின் மேற்கூரையில் இருந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபொழுது அதிர்ச்சி தரும் விதமாக அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ஒரு கோடியே50 லட்சம் என தெரியவந்தது .

போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதும், இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி லாரிகள் மூலமாக சென்னையின் பல இடங்களில் வந்துள்ளனர். ஆந்திராவில் ஒரு கிலோ 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சுற்றுவட்டாரப் பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் யாரிடம் விற்பதற்காக கஞ்சா கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.