Advertisment

ஒரே நாளில் 30பேர் கைது... போலீஸ் அதிரடியால் குட்கா விற்பனைக்கு கடிவாளம்!

30 arrested in one day

ஈரோட்டில் நொச்சிக்காட்டுவலசு என்ற பகுதியில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக டவுன் போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அந்த நொச்சிக்காட்டுவலசு பகுதியில் வீடு வீடாகச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வீட்டிலிருந்தவரை விசாரித்தபோது அவர் பெயர் நாட்ராயன்(39) என்பதும் அவர் குட்காவை வெளி மாவட்டத்திலிருந்து வாங்கி வந்து அதை ஈரோட்டில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நாட்ராயனை கைது செய்தனர்.

Advertisment

மேலும் அவரிடம் இருந்து 350 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 3.50 லட்சமாகும். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எங்கிருந்து குட்கா வாங்கினார். அதை யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்து வந்தார் என்பது குறித்தும் விசாரணைகள் தொடர்கிறது. இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீஸார் 18 ந் தேதி தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளிலும் போலீஸார் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கொண்டு வருபவர்கள், அதனைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

Advertisment

ஈரோடு மாவட்டம் முழுவதும் அந்தந்த டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு பவானி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீஸார் மேட்டூர்-பவானி ரோட்டில், சித்தார் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வேனில் தடை செய்யப்பட்ட 86 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்கள் பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்குக் கடத்தி விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பவானி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், பவானி சேர்ந்த முனுசாமி, ரத்தின பாண்டியன், ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் வீரப்பன் சத்திரம் போலீஸார் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் 2050 கிராம் குட்கா பான்மசாலா புகையிலை பொருட்கள் கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதைப்போல் பவானி பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாகச் சிலர் கைது செய்யப்பட்டனர். அடுத்து அம்மாபேட்டை, பெருந்துறை, அந்தியூர், கடத்தூர்,வெள்ளித்திருப்பூர், கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அதிரடி சோதனை தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

arrested police Drugs kutka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe