3 year old boy incident in Athur Kurichi Radhapuram Tirunelveli dt

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர் குறிச்சி என்ற பகுதியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதில் சஞ்சய் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த சூழலில் தான் இன்று (09.09.2024) காலை 09.30 மணியளவில் இந்த சிறுவன் திடீரென மாயமாகி இருந்தார். சுமார் 3 மணிநேரமாக அவரது உறவினர்கள் சிறுவனைத் தேடி வந்தனர். அப்போது சிறுவனின் வீட்டிற்கு எதிரே உள்ள தாயம்மாள் என்பவர் வீட்டில் உள்ள வாசிங் மிஷினில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

Advertisment

குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயம்மாள் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் இந்த குழந்தையை அவர் புதைக்க முயன்றதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.

Advertisment

அதே சமயம் ஏற்கனவே இருவீட்டாருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக 3 வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் “இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும்” என சிறுவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்தது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.