ADVERTISEMENT

பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஜெயில்தர் சிங்கை கைது செய்ய  மூன்று வாரம் அவகாசம்! 

12:40 PM Jan 27, 2021 | sivarajbharathi

ADVERTISEMENT


ADVERTISEMENT

வட மாநிலத்தில் பதுங்கியுள்ள பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஜெயில்தர் சிங்கை கைது செய்ய மூன்று வார அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வீட்டுக்குள் நுழைந்த வடநாட்டு கொள்ளையர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்தனர். அவரது குடும்பத்தினரைத் தாக்கி படுகாயமடையச் செய்து, 63 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.



ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பல், 2005 ஆம் ஆண்டு நடத்திய இந்தக் கொலை, கொள்ளை சம்பவத்தின் கருவை அடிப்படையாக வைத்துதான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் எடுக்கப்பட்டது.



இந்தக் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொலையாளிகளைச் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.



வழக்கை விசாரித்த போலீசார், 32 பேர் மீது வழக்கு பதிந்ததில் 23 பேர் தலைமறைவாகிவிடவே, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.



இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ் 2005 ஆம் ஆண்டிலிருந்து விசாரணைக் கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயில்தர்சிங்குக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை தடைபட்டுள்ளது. நீதிமன்றம் 3 வார அவகாசம் வழங்கினால், அவரைக் கைது செய்வது தொடர்பாகவோ, மீதமுள்ளவர்களை வைத்து வழக்கை முடித்து வைப்பது தொடர்பாகவோ, காவல்துறையின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.’ என எடுத்துரைத்தார்.



காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்த திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஜெயில்தர் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.



அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மூன்று வாரத்திற்குள் ஜெயில்தர் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு, ஜெகதீஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 15 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT