3 tons of ration rice and flour stored at home Salem seized

சேலத்தில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு ஆகியவற்றை பொது விநியோகத் திட்டப் பறக்கும் படைஅலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

சேலம் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோயில் அருகே ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பறக்கும்படை வட்டாட்சியருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், வியாழக்கிழமை (டிச. 29) அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பரிமளா என்பவர் வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு டன் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனைக்குத் தயார்நிலையில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, மாவு ஆகியவற்றை பொது விநியோகத் திட்டப் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து அரிசியை கிலோ 2 ரூபாய், 3 ரூபாய்க்கு வாங்கி அதை மாவாக அரைத்து சாலையோர உணவகங்கள், பலகாரக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரே சொந்தமாக வீட்டிலேயே அரிசி மாவை மூலப்பொருளாகக் கொண்ட அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களையும் தயார் செய்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.