3 ton ration rice at tirupattur

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் நல்லகிந்தனப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்து ஆந்திரத்துக்கு கடத்திச் செல்வதாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சுமதிக்கு சிலர் தகவல் தந்துள்ளனர்.

அந்தத் தகவலை தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி வட்டாட்சியர் சுமதி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் மற்றும் வருவாய்த் துறையினர், பச்சூரை அடுத்த நல்லகிந்தனப்பள்ளி பகுதியில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் டிசம்பர் 25ஆம் தேதி மாலை சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதனைச் சோதனை செய்தபோது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 57 மூட்டைகளில் இருந்தது மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அந்த வீட்டின் உரிமையாளர் இளையராஜா வீட்டில் இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது, அந்த வீட்டில் வசித்து வரும் இளையராஜா கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசியை வாங்கிவந்து பதுக்கிவைத்து மொத்தமாக லாரிகளில் ஏற்றி அனுப்புவதாகக் கூறினர்.

அந்த அரிசிகளை அருகில் உள்ள ஆந்திரமாநிலத்துக்குக் கடத்திச் சென்று விற்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள், திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தலைமறைவாகியுள்ள இளையராஜாவை போலீஸார் தேடி வருகின்றனர்.