புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள மைனாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தன் குடும்ப வறுமையைப் போக்க தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு வட்டிக்கு கடன் வாங்கி புரூணை நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். சுமார் 55 நாட்களுக்குப் பிறகு புரூணை வாழ் நல் உள்ளங்களின் உதவியுடன் நேற்று இரவு விமானம் மூலம் சுரேஷ் சடலம் திருச்சி விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டது.
புதன்கிழமை காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட சடலத்தை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு போக சுரேஷ் உறவினர்களுடன் பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஆனந்தகுமாரும் ஆம்புலன்ஸுடன் காத்திருந்தார். சுரேஷ் உடலைப் பெற்றுக் கொள்ள வந்திருந்த அவரது தந்தையிடம் சடலத்தை வெளியே எடுத்துக் கொடுத்த ஒப்பந்த ஊழியர் ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளார். இதையறிந்த ஆனந்தகுமார் உடனே விமான நிலைய மேலாளர்களிடம் சென்று சடலத்தை வெளியே கொடுக்கக் கூட 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமா எனப் புகார் கூறிய நிலையில் பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்ததோடு ஒப்பந்த ஊழியரை பணி நீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார் மேலாளர்.
இதுகுறித்து பாஜக ஆனந்தகுமார் கூறுகையில், “சடலத்தை கூட மீட்க முடியாத வறுமையில் வாடும் குடும்பம். அந்த குடும்பத்திடம் சடலத்தை வெளியே கொடுக்க ஒப்பந்த ஊழியர் ரூ.3 ஆயிரத்தை சுரேஷின் அப்பாவிடம் வாங்கியுள்ளது தெரிந்ததும் விமான நிலைய மேலாளர்களிடம் புகார் கூறினேன். அதன் பிறகு பணத்தை திருப்பிக் கொடுத்தனர். இவர்களிடம் ரூ.3 ஆயிரம் வாங்கியது போல மற்றவர்களிடம் ரூ.5 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டு தான் சடலத்தை கொடுக்கிறார்களாம். ஒப்பந்த ஊழியரை பணி நீக்கம் செய்வதாக மேலாளர் உறுதி அளித்தார். ஆனால் நீக்கியது தெரியாது. இப்படி பிணத்திற்கும் லஞ்சம் வாங்குவது வேதனையாக உள்ளது” என்றார்.