
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சிவா (31) மற்றும் சேலம் சங்ககிரியை சேர்ந்த ஆனந்தன் (37) இருவரும் கடந்த 08-01-2018 ஆம் ஆண்டு சேலத்திலிருந்து 350 கிலோ கஞ்சாவை மறைத்து லாரியில் நாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்துள்ளனர். இவர்கள் திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது மதுரை போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு போலீசார் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் 350 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு, அவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இதையடுத்து போலீசார் விசாரணையில் கடத்தப்பட்ட கஞ்சா, வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது(61) என்பவரிடம் ஒப்படைக்கச் சென்றதாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நேற்று புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.