
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கிரிசமுத்திரம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து படித்து வருகின்றனர்.
கூலித் தொழிலாளியான சாமுவின் 13 வயது மகன் ரபீக் 8 ஆம் வகுப்பும், ராஜியின் மகன் விஜய் 8 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். ராஜியின் மற்றொரு மகனான சூர்யா 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு ரபீக் ஒரு சைக்கிளிலும் அண்ணன் தம்பிகளான விஜய், சூர்யா இருவரும் ஒரு சைக்கிளில் சென்னை டூ பெங்களூரு தேசிய நாற்கர சாலையின் சர்வீஸ் சாலையில் ஜாலியாக பேசிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது வேலூரிலிருந்து ஏலகிரிக்கு கர்நாடகா பதிவு எண் கொண்ட சிவப்பு கலர் கார் ஒன்று சிறுவர்கள் சென்ற சைக்கிள் மீது மோதியது. இரண்டு சைக்கிளில் சென்ற மூன்று சிறுவர்களும் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் சாலையின் ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. அதிலிருந்து 4 இளம்பெண்கள், 3 இளைஞர்கள் இறங்கி தள்ளாடியபடி தப்பி ஓட முயன்றுள்ளனர். விபத்தைப் பார்த்து அதிர்ச்சியான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். கார் ஓட்டி வந்த சந்தோஷ் என்பவரை பிடித்து சரமாரியாக தாக்கியவர்கள், அவர்கள் தப்பி போகாமல் பிடித்து வைத்துள்ளனர். இறந்து போன சிறுவர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து கண்ணீரோடு ஓடி வந்தவர்கள் சாலையில் இறந்து கிடந்த தங்களது குழந்தைகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். கோபமான அப்பகுதி பொதுமக்கள், உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி பாலகிருஷ்ணன், திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, வாணியம்பாடி ந.செ. சாரதிகுமார் நேரில் வந்து குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பொதுமக்களை சமாதானம் செய்த போலீசார் சாலை மறியலை கைவிட செய்தனர். இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 3 சிறார்கள் மீது மோதிய காரில் வந்தவர்கள் வேலூர் காட்பாடியில் உள்ள பிரபல நிகர்நிலை பல்கலைக்கழகம் விஐடியில் படித்துக்கொண்டு இருப்பவர்கள் என்பதும், மது விருந்திற்காக சுற்றுலாத் தலமான ஏலகிரிக்கு சென்றுகொண்டிருந்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. கார் ஓட்டி வந்த இளைஞன் சந்தோஷ் அந்த பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி படித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. மற்றவர்கள் குறித்த தகவலை அப்படியே காவல்துறை மறைத்துவிட்டது.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை இப்போது பணக்காரர்களின் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. இங்கு வந்து ஹோட்டல்களில், ரிசார்ட்டுகளில் ரூம் போட்டுவிட்டு குடி, கும்மாளம் போடுபவர்கள் போதை பவுடர்களை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அப்படி வரும் சென்னை, வேலூர், பெங்களுரூவைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள், ஐடி இளையோர்கள் தாறுமாறாக கார், பைக் ஓட்டுவது வாடிக்கை. இவர்களின் வாகனங்கள் மற்றவர்கள் மீது மோதி இறப்பு வரை செல்கிறது அல்லது அவர்களது வாகனங்கள் சாலை தடுப்புகளின் மீது மோதி இறந்து போகிறார்கள். கார் ஓட்டுநர்கள் பெரும்பாலும் மருத்துவ பரிசோதனையின் போது போதையில் இருக்கிறார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
மேலும், ஏலகிரி மலையில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களில் ரெய்டு செய்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் கும்பல்களை தடுத்தால் போதையில் தாறுமாறாக கார்களை ஓட்டிக்கொண்டு வருபவர்கள் குறைவார்கள். இதுபோன்ற போதையால் நடக்கும் விபத்துகளும் ஏதும் அறியாத இதுபோன்ற சிறார்கள் இறப்பும் குறையும் என்கின்றனர்.