திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே கடந்த 2  தினங்களுக்கு முன்பு ஒருவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதோடு அவரிடம் யார் யார் செல்போனில் பேசி இருக்கிறார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபருடன் நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் மற்றும் நன்னிலம் மதுவிலக்கு காவல்துறையில் பணியாற்றும் செல்வேந்திரன் உள்ளிட்ட 3 காவலர்கள் செல்போனில் தொடர்ந்து பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த 3 காவலர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதில் இவர்கள் 3 பேரும் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கார்டு பணியிடை நீக்கம் உத்தரவிட்டுள்ளார். அதோடு இதே போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  மாவட்ட கண்காணிப்பாளர் கருண்கார்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபருடன் தொடர்பில் இருந்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.