
சேலம் அருகே கூலிப்படை ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் திருநாவுக்கரசு (26). பெயிண்டர். முந்தைய அதிமுக ஆட்சியின்போது அக்கட்சியின் சில பிரமுகர்களிடம் கூலிப்படை ரவுடியாக செயல்பட்டு வந்தார். இவரை டிச. 17, 2021ம் தேதி இரவு, நாழிக்கல்பட்டியில் வைத்து ஒரு கும்பல் கத்தி மற்றும் கல்லால் தாக்கி படுகொலை செய்தது. இதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதலில் திருநாவுக்கரசுவின் கூட்டாளி சரவணனும் பலத்த காயம் அடைந்தார்.
இதே ஊரைச் சேர்ந்த திலீப்குமார் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். திலீப்குமார் கொலைக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில் திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக முதல்கட்டமாக கவுதமன் (21), பாலியான் (24), பாலாஜி (20), தமிழன்பன் (35), தங்கவேல் (34), குமரேசன் (32), அழகுமணிகண்டன் (22) மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்து, மேலும் ஒருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கருதப்பட்ட சிவா என்கிற பரமசிவம், ரஞ்சித்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
அவர்களை மல்லூர் காவல்துறையினர் மூன்று நாள்கள் காவலில் எடுத்துள்ளனர். டி.எஸ்.பி. தையல்நாயகி, காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், திருநாவுக்கரசு கொலை வழக்கில் மேலும் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சேலம் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த வீரமணிகண்டன் (22), செந்தில்குமார் (21), ஆகிய இருவர் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மல்லூர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.