3 people arrested case of 2 crore land encroachment through fake documents

சேலத்தில், போலி ஆவணங்கள் மூலம்2 கோடி ரூபாய் மதிப்புள்ளநிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

சேலம் ஏற்காடு அடிவாரம் செல்லும் வழியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் நகரைச் சேர்ந்தவர் ரேவதி (45). பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்குச் சொந்தமாகநெத்திமேடு பகுதியில் 40 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. இங்கு எண்ணெய் தயாரிப்பு ஆலையும், கிடங்கும் உள்ளது. இந்த இடத்தை பார்த்துக் கொள்ளும்படி ரேவதி, தனது மாமனார் ஜம்புகேஸ்வரனிடம் ஒப்படைத்து இருந்தார். உடல்நலமில்லாமல் அவர் இறந்துவிட்டார்.

Advertisment

இந்நிலையில், ரேவதிக்கு சொந்தமான நிலத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 5000 சதுர அடி பரப்பளவு நிலத்திற்கு மட்டும் வாடகை ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகக் கூறி, தாதகாப்பட்டி திருஞானம் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45), கொண்டலாம்பட்டி முன்சீப் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (63), அவருடைய மகன் கார்த்தி (33), வழக்கறிஞர் ஒருவர் உள்பட 8 பேர் போலியான ஆவணங்களுடன் அந்த நிலத்திற்குள் புகுந்தனர். தான் யாருக்கும் தனது நிலத்தில் புதிதாக வாடகை ஒப்பந்தம் போட்டுக் கொடுக்கவில்லை என ரேவதி விளக்கம் அளித்தும் அந்த கும்பல் நிலத்தை விட்டு வெளியேறவில்லை. ஒரு கட்டத்தில் அந்த கும்பல், இந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என ஒரு பெரிய தொகையைக் கேட்டு ரேவதியை மிரட்டியுள்ளனர்.

இதில் கோபாலகிருஷ்ணன், இறந்துபோன ஜம்புகேஸ்வரனிடம் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர், வேலவன் என்பவருடன் சேர்ந்து ஜம்புகேஸ்வரனை மிரட்டி 15 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி, இதுகுறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில்,கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது ஆய்வாளர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்தார். முதல் கட்டமாக இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், அவருடைய மகன் கார்த்தி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.