Skip to main content

ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புக் காவலில் சிறையிலடைப்பு!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

3 members arrested in one day

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் மற்றும் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், சென்னை, மீனம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் காவல் நிலையத்தில் இரண்டு வழிப்பறி வழக்குகள், சென்னை குன்றத்தூரில் வழிப்பறி வழக்கு, வேலூர் மாவட்டம் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகள், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் என மொத்தம் 12 வழக்குகள் உள்ளன.

 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிகுப்பம் மெயின்ரோட்டில், அரிவாளுடன் வாகனத்தில் சுற்றித் திரிந்துகொண்டு அப்பகுதியில் செல்பவர்களை குடிபோதையில் தாக்கி மிரட்டியுள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்து வந்து கொண்டிருந்த ஆய்வாளர் தவச்செல்வம், உதவி ஆய்வாளர் செல்வி, ரவுடி செல்வம் (என்கிற) விஜய் செல்வத்தைக் கைது செய்தனர். இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி இவருக்கு ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதன் பேரில் குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தமிழழகன் என்பவர் லாட்டரி சீட்டுகளை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை காவல் உதவி ஆய்வாளர் புஷ்பராஜ் பிடிக்கும்பொழுது அவரை கத்தியால் குத்த முயற்சித்தார். அதையடுத்து விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன் விசாரணை மேற்கொண்டு தமிழ் (எ) தமிழழகனை கைதுசெய்து சிறையிலடைத்தார். இவர் மீது மேலும் நான்கு லாட்டரி சீட்டு வழக்குகள் உள்ளதையடுத்து இவரும் குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டார். 

 

இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள அழகு பெருமாள்குப்பத்தைச் சேர்ந்த பாண்டு (எ) பாண்டியன் அப்பகுதியில் சாராயம் பதுக்கிவைத்திருந்துள்ளார். தகவலின் அடிப்படையில் புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் தீபன் மற்றும் போலீசார் கைதுசெய்யும் பொழுது பாண்டியன் தங்கராசு என்ற போலீசாரை அசிங்கமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயற்சிசெய்ததால் கைது செய்யப்பட்ட நிலையில், பாண்டியன் மீது புதுப்பேட்டை காவல் நிலையம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு, திருநாவலூர் காவல் நிலையம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் 14 சாராய வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இவருடைய குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

 

நேற்று ஒரேநாளில், கடலூர் மாவட்டத்தில் லாட்டரி வியாபாரி, சாராய வியாபாரி, ரவுடி என மூன்று பேர், ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்