Skip to main content

அடுத்தடுத்த நாட்களில் தொடர் பாலியல் துன்புறுத்தல்கள்; சிறுமி சொன்ன பரபரப்பு வாக்குமூலம்

 

3 man arrested for coimbatore girl case

 

தன்னை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமி ஒருவர் பரபரப்பு வாக்கு மூலமம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி படித்து வரும் அரசுப் பள்ளியில் ‘சைல்டு லைன்’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், சிறுமிகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்பட்டால் தயங்காமல் தனியாக வந்து புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில், அந்த சிறுமி  தன்னை 3 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அதிகாரிகளிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பிறகு சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், அவரிடம் தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் மதன். 24 வயதான இவர், பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதியன்று வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, மதன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனால், அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

 

இதையடுத்து, அந்த சிறுமியிடம் நட்பாக பேசிய 15 வயது சிறுவன் ஒருவன் கடந்த 15 ஆம் தேதியன்று சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த சிறுமிக்கு, தனது தந்தையின் நண்பரான சதாசிவம் என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பெயிண்டர் மதன், சதாசிவம் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !