
காச நோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் மனிதா்களைத் தாக்கக் கூடிய ஒரு நோயாகும். இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக காசநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காசநோய் கண்டறியும் பரிசோதனைகளை மருத்துவத்துறை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் நெஞ்சக நோய் மையத்தில் இருந்து காசநோயைக் கண்டறிய நவீன எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்ட வாகனத்தை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது நம்மிடம் பேசிய இணை இயக்குனர் பிரகலாதன், “இந்தியாவில் உள்ள அனைவருக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வு கண்டிப்பாக ஏற்பட வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்கள் காச நோய் கண்டறியும் முகாமின் மூலமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில், காச நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 1,000 பேர் மரணமடைகிறார்கள். அதே போல் சுமார் 3 லட்சம் குழந்தைகள் காச நோயால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு, 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காச நோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மருத்துவத் துறையினரோடு மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் காச நோயை முற்றிலும் ஒழிக்க முடியும். காச நோய் பாதிக்கபட்டவர்கள் சிகிச்சையின்போது ஊட்டசத்து உதவித்தொகையாக மாதம் தோறும் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு, அதில் சுமார் 1,500 பேர் காச நோயாளிகளாகக் கண்டறியபட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது” என்றார்.