Skip to main content

“3 லட்சத்து 40 ஆயிரம் பேர் அரசுப் பள்ளியை நோக்கி வந்துள்ளனர்” - மகிழ்ச்சியுடன் பேட்டியளித்த அமைச்சர்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

"3 lakh 40 thousand people have come to the government school" - Minister interviewed with pleasure

 

திருச்சி திருவெரும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து சால்வை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “பாண்டிச்சேரியில் 9 - 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 

அதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து, தற்போதுள்ள கரோனா சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதலமைச்சர் என்ன வழிவகை கூறுகிறாரோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும். ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்துக்கணிப்பின்படி 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி வந்துள்ளனர். நடப்பாண்டு அரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை அதிகமாக இருக்கும். வருகிற மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் இருக்கும் ஆசிரியர்களுக்கான தக்கவைக்கவும் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.

 

துறை ரீதியான ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. வருகின்ற மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம். நீட் பயிற்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. அரசின் நிலைப்பாடு என்பது நீட் வேண்டாம் என்பதுதான். தமிழகத்திற்கு விலக்கு என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். ஆன்லைன் மூலமாக கடந்த ஆண்டு முதல் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கூறியபடி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெறுவதுதான் எங்கள் இலக்கு. 

 

9 மற்றும் 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இடைநிற்றல் அதிகரித்துவருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 17 சதவீத இடைநிற்றலை 5 சதவீத குறைப்பதுதான் எங்களது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள். கருத்துக்கணிப்புகள் எடுக்கப்படவுள்ளது, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி பலர் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரியிடம் கலந்தாலோசித்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம். கரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்தால் பள்ளிகள் திறப்புக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு தைரியம் வர வேண்டும். இதற்கு சற்று காலம் எடுத்தால் பாண்டிச்சேரியில் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் வழிவகைகள் குறித்து உற்று நோக்கிவருகிறோம். அதனடிப்படையில் முதலமைச்சரிடம் ரிப்போர்ட்டை சமர்ப்பித்து அவரது உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்